கோவை; சாத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு, கோவை வாழ் பீகார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
பீகார், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், சாத் பூஜை ஆண்டுதோறும், தீபாவளிக்கு பின், ஆறாவது நாளில் துவங்குகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் இந்த வழிபாட்டில், தண்ணீர் கூட அருந்தாமல், பக்தர்கள் விரதம் இருப்பர்.அவ்வகையில், கோவையில் வசிக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள், சாத் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் பங்கேற்று, சூரியனை வழிபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் க;றியதாவது; சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், குடும்பத்தினர் நலமாக வாழ வேண்டியும், வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்ய வரங்களை கேட்கவும், இந்த சாத் பூஜையை கொண்டாடுகிறோம். தீபாவளி கடந்து ஆறு நாட்களுக்கு பின், இந்த பண்டிகை துவங்கி கொண்டாடப்படுகிறது.பெண்கள் அதிகாலை புனித நீராடி, விரதம் இருந்து, தண்ணீரில் நின்று சூரியனை வழிபட்டோம். அதன்பின், சூரிய பகவானுக்கு, அர்க்கியம் என்ற படையல் வைத்து, நிறைவு செய்வோம் என்றனர்.