பதிவு செய்த நாள்
28
டிச
2012
12:12
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது கரிக்ககம் சாமுண்டி கோயில்.
நீதியை நிலைநாட்ட உயர் நீதிமன்றங்களும், உச்சநீதி மன்றங்களும் செயல்பட்ட போதிலும் கேரளத்தில் இன்றும்கூட அன்னை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில் பல வழக்குகள் சத்தியம் செய்து தீர்வு காணப்படுகின்றன. குற்றம் சாட்டியவரும் குற்றவாளியும் ஆலயக்குளத்தில் நீராடிய பின்னர் ஈர உடையுடன் ரத்த சாமுண்டி அம்மன் முன் வந்து காணிக்கை செலுத்துகின்றனர். அதன்பின் கோயிலில் விளக்கேற்றி தீபச்சுடரின் மேல் சத்தியம் செய்கின்றனர். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு அன்னை உடனடியாக தண்டனை தருவாள் என்பதால், எவரும் இங்கே பொய் சத்தியம் செய்வதில்லை. திருவிதாங்கூர் மன்னரின் படையில் களரிச்சண்டை பயிற்சிக் களமாக விளங்கிய இந்த இடம் காலத்தால் மருவி கரிக்ககம் என்று ஆனதாகச் சொல்வதுண்டு. இந்த கோயில் உருவாகக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. மந்திர தந்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்த பராசக்தியின் தீவிர பக்தர் ஒருவர், இளைஞன் ஒருவனை தன் சீடனாகக் கொண்டு உபதேசம் செய்து வந்தார். அவர்களின் தீவிர பக்தியைக் கண்ட அம்பிகை, ஒரு நாள் சிறுமி உருவில் அவர்கள் முன் தோன்றினாள். அவளை அம்மன் என உணர்ந்த இருவரும், வணங்கித் துதித்து ஓர் இடத்தில் பச்சைப் பந்தல் அமைத்து குடியிருத்தினர். அவள்தான் கரிக்ககம் சாமுண்டி உண்மையான பக்தர்களைக் காப்பதிலும், அநீதி இழைப்பவர்களைத் தண்டிப்பதிலும் தன்னிகரில்லா தேவியாகத் திகழ்கிறாள் இந்த அன்னை..
அம்மன், பகவதி, பரமேஸ்வரி என்று ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இக்கோயிலின் சிறப்பு. சாமுண்டி தேவி, அநீதியை முறியடிக்கும்போது ரத்த சாமுண்டி தேவியாகவும் சகல நலன்களை அருளும்போது பாலசாமுண்டி தேவியாகவும் திகழ்கிறாள். ரத்த சாமுண்டி, பாலசாமுண்டி ஆகிய இருவரும் சுவர் சித்திரமாகவே காட்சியளிக்கின்றனர். கோயிலின் வளாகத்தில் கணபதி, சாஸ்தா, குரு, யோகீஸ்வரன், நவகிரகங்கள், ஆயிரம்வல்லி அம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. குறை தீர்க்கும் தேவியாக சாமுண்டி அருள்பாலிக்கிறாள்.