பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரஸம்ஹார விழா கொண்டாடப்பட்டது. அக்., 22 அன்று விநாயகர் வேள்வி, அபிஷேக அலங்கார பூஜைகள் ஆகியவற்றுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து நடந்த வேல்மாறல் பாராயணம், கந்த சஷ்டி பாராயணம், முத்துக்குமாரசுவாமி லட்சார்ச்சனை ஆகியவற்றில் பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நேற்று, கந்த சஷ்டியை முன்னிட்டு, சூரனை வதம் செய்யும் நிகழ்வு, மாலை, 7.00 மணிக்கு துவங்கியது. வண்ண விளக்குகள், வானவேடிக்கைகள் என, மாதப்பூர் முத்துக்குமார சுவாமிமலை, விழாக்கோலத்தில் ஜொலித்தது. மயில்வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, மரகதாம்பிகை தாயாரிடம் வேல் பெற்றுக்கொண்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, சூரனை வதம் செய்தார். சிறப்பு அலங்காரத்தில், வள்ளி தெய்வானை சமேதராக, முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.