பழநியில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்; சண்முகருக்கு 16 வகை அபிஷேகம்
பதிவு செய்த நாள்
28
அக் 2025 03:10
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா அக்.22., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் அக்.27., கோவிலில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடைபெற்று, பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி நான்கு கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. வெற்றி விழாவிற்கு பின் கோயிலில் இரவு சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இன்று (அக்.28.,ல்) கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அமிர்தலிங்கம்குருக்கள், செல்வசுப்ரமணியம் குழுவினர் யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10:50 மணிக்கு சண்முகர்,வள்ளி, தேய்வானைக்கு மாங்கல்யதாரணம், செய்து திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்ஸவம், திரளாக கலந்து கொண்ட பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நடை பெற்றது. மலர் மாலை மாற்றுதல் நடைபெற்றது திருமணகோலத்தில் சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பழநி கோயிலில் வெளிப்பிரகார பகுதியில் சண்முகர், வள்ளி தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கு பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
|