பக்தர்களை ஈர்ப்பதில் பத்ரிநாத்தை மிஞ்சிய கேதார்நாத்; மூன்று ஆண்டுகளாக சாதனை
பதிவு செய்த நாள்
30
அக் 2025 10:10
உத்தரகண்ட் செல்லும் சிவன் - விஷ்ணு பக்தர்கள் அனைவரும் அறிந்த தலங்கள், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள். உலகம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் இந்த தலங்களுக்கு வருகின்றனர். சாலையோரம் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, யாத்திரை செல்வது சுலபம் என்பதால் பலரது கவனம் அந்த புனித தலத்தின் மீதே இருந்தது. கடினமான மலைப்பாதைகள், சவாலான சீதோஷ்ண நிலை, 16 கி.மீ., துாரத்துக்கான மலைப் பாதை பயணம் போன்றவை , கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடையாக இருந்தன. அதேசமயம், 2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், அங்கு பேரழிவை உண்டாக்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்ததும், உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததும், கேதார்நாத் செல்லும் ஆசையை பக்தர்கள் மனதில் இருந்து அறவே அழித்தது. தோல்வியை கண்டு துவளாமல், கேதார்நாத்தில் அழிந்த கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கியது உத்தரகண்ட் அரசு. இதன் விளைவு, கடந்த மூன்று ஆண்டுகளாக , பத்ரிநாத்தைவிட கேதார்நாத் செல்லும் பக்தர்கள் அதிகமாகியுள்ளனர். வெள்ள பேரழிவு உத்தரகண்ட் அரசின் தரவுகளின் படி, 1990ல் பத்ரிநாத் கோவிலுக்கு 3.62 லட்சம் பேரும், கேதார்நாத் கோவிலுக்கு 1.17 லட்சம் பேரும் சென்றுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு வரை இந்த போக்கு மாறாமலே இருந்தது. அந்தாண்டு, பத்ரிநாத்துக்கு 17.6 லட்சம் பேரும், கேதார்நாத்துக்கு 15.6 லட்சம் பேரும் சென்றனர். இடையே, மழை வெள்ள பேரழிவுக்கு பிந்தைய 2014ம் ஆண்டில், 1.8 லட்சம் பேர் பத்ரிநாத் சென்ற நிலையில், கேதார்நாத்துக்கு 40,832 பேர் மட்டுமே வருகை புரிந்தனர். ஆனால், 2023 முதல் இந்த நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. 2023ல் பத்ரிநாத்துக்கு 18.34 லட்சம் பேர் சென்றனர். எப்போதும் இல்லாத அளவாக கேதார்நாத்துக்கு 19.61 லட்சம் பேர் அந்த ஆண்டில் சென்றனர். இது, கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்கிறது. கேதார்நாத் கோவிலுக்கு இந்தாண்டுக்கான யாத்திரை கடந்த 23ம் தேதி முடிவடைந்தது. இந்தாண்டில், அக்கோவிலுக்கு 17.68 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். பத்ரிநாத் கோவிலுக்கு 14.15 லட்சம் பேர் மட்டுமே வந்துள்ளனர். முன்பு வயதானவர்கள் அதிகளவு கேதார்நாத் கோவிலுக்கு யாத்திரையாக வந்த நிலையில், தற்போது அது மாறி, இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு இது குறித்து, உள்ளூர்வாசியும், ஹோட்டல் உரிமையாளருமான மனோஜ் செம்வால் கூறுகையில், பேரழிவு ஏற்படுத்திய கோரத்தாண்டவம், பக்தர்களை கேதார்நாத் பக்கம் வராமல் இருக்கச் செய்தது. இருப்பினும், உத்தரகண்ட் அரசு மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள், உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள், பக்தர்களின் எண்ணங்களை மாற்றிஉள்ளன. குறிப்பாக பிரதமர் மோடியின் கேதார்நாத் வருகையை அடுத்து, இந்த மாற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது, என்றார். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள உத்தரகண்ட் அரசு அதிகாரிகள், சாலை இணைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம், அதிகரித்து வரும் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா வசதிகள் காரணமாகவே, இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -
|