பாலக்காடு; குருவாயூர் கோவில் கலை விருது, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பால்குளங்கரை அம்பிகா தேவிக்கு வழங்க, தேவஸ்தானம் தீர்மானித் துள்ளது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற குரு வாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி கலை விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, கலை விருது பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பால்குளங்கரை அம்பிகா தேவிக்கு வழங்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. நவ., 16ம் தேதி கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி கோவில் வளாக கலையரங்கில் நடக்கும் செம்பை சங்கீத உற்சவ துவக்க விழாவில், 50,001 ரூபாயும், மூலவரின் உருவம் பதித்த 10 கிராம் எடை கொண்ட தங்க பதக்கமும் அடங்கிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, அவரது இசைக்கச்சேரி நடக்கிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானம் தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ரங்கநாத் சர்மா, சதனம் ஹரிகுமார் ஆகியோர் அடங்கிய கலை விருது நிர்ணய குழு, இவரை தேர்வு செய்துள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களாக கர்நாடக இசைக்கு ஆற்றிய பங்களிப்பை கருத்தில் கொண்டு இவ்விருதுக்கு அவரைத் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் சுவாதி திருநாள் அரசு சங்கீத கல்லூரியில் இருந்து பேராசிரியராக ஓய்வு பெற்ற பால்குளங்கரை அம்பிகா தேவிக்கு மதராஸ் மியூசிக் அகாடமியின் சங்கீத கலா ஆச்சார்யா விருது, கேரளா சங்கீத நாடக அகாடமி விருது உட்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன.