ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா; பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி உட்பட 140 நாட்டு பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2025 01:11
புட்டபர்த்தி; ஸ்ரீசத்யசாய் பாபா 100வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்க உள்ளனர்.
ஸ்ரீசத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்கள் ஆகினர். 2011 ஏப்ரல் 24ல் ஸ்ரீசத்யசாய் பாபா மறைந்தார். புட்டபர்த்தியில் இவரது சமாதி மந்திர் அமைந்துள்ளது. ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் நடக்கவுள்ளது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான தங்கும் இட வசதி, உணவு ஆகியவற்றை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகம் செய்துவருகிறது. நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் கூறியதாவது: அனைவரையும் நேசியுங்கள்; எல்லோருக்கும் சேவை செய்யுங்கள் - எப்போதும் உதவுங்கள், யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் என்பதே ஸ்ரீசத்யசாய் பாபாவின் முக்கிய போதனையாக உள்ளது. ஸ்ரீசத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 2011ல் சத்யசாய் பாபா சமாதி நிலையை அடைந்த பின், புட்டபர்தியில் நடக்கும் முதல் பிரமாண்ட நிகழ்வு இதுவாகும். 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு வரவுள்ளனர். நவம்பர் 19ம் தேதி நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். சத்யசாய் பாபா நினைவு தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. 19ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவற்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். 22ம் தேதி சத்யசாய் நிகர்நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
ஸ்ரீசத்யசாய் பாபாவின் போதனைகளை கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வாக இருக்கும். ஸ்ரீசத்யசாய் பாபாவின் போதனைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பக்தர்கள் தங்களது வாழ்நாளில் மிக முக்கிய விழாவாக இதை நினைக்கிறார்கள்.கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொருவருமே தங்களை சிறப்பு விருந்தினராகவே உணர்வர். அப்படிப்பட்ட உபசரிப்பு இங்கு வரும் அனைவருக்கும் கிடைக்கும். பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாளான நவம்பர் 23ம் தேதியை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகள், அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றி என ரத்னாகர் கூறினார்.
மேலும்
சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025
செய்திகள் »