சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பே குமுளி மலைப் பாதையில் துவங்கியது நெரிசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2025 12:11
கூடலுார்; சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன்பே குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரோடு விரிசல் ஏற்பட்ட பகுதியில் விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவ.16ல் நடை திறக்கப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்வார்கள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் வாகனங்கள் குமுளி மலைப் பாதையை கடந்து செல்லும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம்.
மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவு அருகே சமீபத்தில் ரோடு விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாயம் இருந்தது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். இருந்தபோதிலும் அப்பகுதியில் ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்லும் வகையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வரும் நிலையில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அப்பகுதியில் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிக்காக மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான வளைவில் ஒரு வாகன மட்டுமே செல்லக்கூடிய வகையில் இருப்பதால் நெரிசல் ஏற்படத் துவங்கியுள்ளது. சில அரசு பஸ்கள் ஏற முடியாமல் திணறி நின்று விடுவதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் நெரிசல் ஏற்பட்டுள்ளது. விரைவாக அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.