பதிவு செய்த நாள்
29
டிச
2012
11:12
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி காலை 6 மணிக்கு விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், சிவன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், தொடர்ந்து நடராஜருக்கும் சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து ருத்தர மந்திரங்களுடன் பூஜைகள் நடந்தது. சிவபக்தர்கள் சிவபுராணம், திருவெம்பாவை பாடினர். ஏற்பாடுகளை சமூக நல ஆர்வலர் தங்கராஜன் செய்திருந்தார். தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு தேனபிஷேகம் நடந்தது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து தரிசன விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகள் செய்தனர். மண்டகப்பாடி, அரியூர், செங்கனாங்கொல்லை பகுதியை சேர்ந்த வெள்ளாள செட்டியார் வகையறாவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவன ேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நாட்டார் ராமலிங்கம் தலைமையில் சந்திரசேகரன் முன்னிலையில் ரவி குருக்கள் பூஜைகள் செய்தார். சங்கராபுரம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு 17 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வைத்து தரிசனம் நடந்தது. சிவகாம சுந்தரி அம்பாளையும், நடராஜரையும் சுந்தரர் சமாதானம் செய்யும் திருவூடல் நிகழ்ச்சியும் நடந்தது. வெங்கடேச சிவாச்சாரியார் வைபவங்களை நடத்தினார். திருவெண்ணெய் நல்லூர்: மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 2.30 மணிக்கு ஆனந்த நடன நிகழ்ச்சியும், 3 மணிக்கு திருவீதியுலாவும் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு கோபுர தரிசனம் நடந்தது. செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி, உபயதாரர்கள் கார்த்திகேயன், மந்திரவாசன் செய்திருந்தனர். மெய்கண்டார் கோவிலிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.