பதிவு செய்த நாள்
01
ஜன
2013
11:01
காரைக்குடி: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரையாண்டு விடுமுறையால், மாணவர்களை தேடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மார்கழி மாதத்தில் சைவ, வைணவ கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். இவற்றை, அனைத்து கோவில்களிலும், பாடச்செய்யும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கு, இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்தி பரிசுகளை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த உத்தரவு,கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 1முதல் 5, 6 முதல் 8 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடத்தவேண்டும். திருப்பாவை, திருவெம்பாவையில் பிரசித்தி பெற்றவர்களை நடுவர்களாக வைத்து, மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தவேண்டும். போட்டியை, ஜன.,2க்குள் நடத்தவேண்டும். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியை ஜன.,7ல் நடத்தவேண்டும். அதில் மூன்று பேரை தேர்வு செய்து, ஜன.,10ககுள் அறநிலைய கமிஷனருக்கு அனுப்பவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல்: திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகளை நடத்துமாறு, நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, அரையாண்டு விடுமுறை என்பதால், மாணவர்களை போட்டியில் பங்கேற்க செய்வதில், நிர்வாக அலுவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, பெரும்பாலான கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை புத்தகங்கள் இல்லை. திடீர் அறிவிப்பால் "பாவை விழா போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, அறநிலைய துறை நிர்வாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.