பதிவு செய்த நாள்
02
ஜன
2013
10:01
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அடுத்த மேலப்பார்த்திபனூரில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிவன் கோவிலில், திருப்பணிக்காக தோண்டிய போது, மகாமண்டப பாதாள அறையில், ஆறு சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலப்பார்த்திபனூர் சந்தைக்குளம் ஊரணிக்கரையில், மீனாட்சி சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. ஒன்பது முதல், 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான சான்றாக, இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில், வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, மூலவர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். மத்திய அரசின், 13வது நிதி ஆணையத்தின் உதவியுடன், 30 லட்ச ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணி, இரு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. பணிகளை, மானாமதுரை ஸ்தபதி பாண்டி செய்து வருகிறார். நேற்று மதியம், 3:00 மணிக்கு, கோவில் மகாமண்டபத்தின் கீழ் தளத்தை பிரிக்கும் பணி நடந்தது. அப்போது, 10 அடி நீளம், 3 அடி அகலம், 2.5 அடி ஆழத்தில் ஒரு அறை தென்பட்டது. அதில், பிரியாவிடை, சோமஸ்கந்தர், மீனாட்சி, சண்டிகேஸ்வரர், ஞானசம்பந்தர், அஸ்திரதேவர் சிலைகளை கண்டெடுத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் சிவாஜி கூறுகையில், ""சிலைகள் எந்த உலோகத்தால் ஆனது என, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பிறகே தெரியவரும். தற்சமயம் அந்த சிலைகளை, பூஜைக்காக வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். ஆனால், வருவாய் துறை அலுவலர்கள் வசம் சலைகள் ஒப்படைக்கப்பட்டு, பின் எங்கு வைப்பது என, முடிவெடுக்கப்படும், என்றார்.