நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் திருவேடுபறி உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2013 10:01
காரைககால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் திருவேடுபறி உற்சவம் நடந்தது.காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கடந்த மாதம் முதல் பகல்பத்து, ராபத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இராபத்து உற்சவத்தின் 8வது நாள் நிகழ்ச்சியாக, கொள்ளையடித்து கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு ஞானம் அளிக்கும் திருவேடு பறி உற்சவம் நடந்தது.விஷ்ணு பக்தனான திருமங்கையாழ்வார், வைணவ பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்பியபோது, அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் திருமங்கையாழ்வார் அன்னதானம் வழங்கி வந்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்க நிதி இல்லாதபோது, அதிக பொருள் உள்ளவர்களிடம் கொள்ளையடிக்க முடிவு செய்தாக கூறப்படுகிறது. இவரை திருத்த பெருமாள் திருமண கோலத்தில் ஆபரணங்களுடன் தம்பதியாக எழுந்தருளினார். பெருமாள் என்பதை தெரியாமல், தம்பதியரை இடைமறித்து திருமங்கையாழ்வார் நகைகளைப் பறித்தார். கடைசியாக பெருமாள் காலில் இருந்த மெட்டியைக் கழற்ற முயற்சித்தபோது, அவரின் திருமுடி பெருமாளின் திருவடியில் பட்டு ஞானம் பெற்று திருந்தியதாக வரலாறு கூறப்படுகிறது.இக்கதையை விளக்கி ஒவ்வொரு ஆண்டும் வேடுபறி உற்சவம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் நித்ய கல்யாண பெருமாள் திருமண கோலத்தில் எழுந்தருளினார். பின், திருவீதியுலாவின்போது திருவேடுபறி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.