பதிவு செய்த நாள்
02
ஜன
2013
10:01
ஓசூர்: ஓசூர், ராஜகணபதி நகர், ஆஞ்சநேயர் கோவிலில், 55வது ஆண்டாக, புத்தாண்டு தினத்தன்று, கடலை திருவிழா நடந்தது. ஆஞ்சநேய சுவாமி மீது, பக்தர்கள், வேர்க்கடலை தூவி, நேர்த்தி கடன் செலுத்தும், வினோத பூஜை நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை, ராஜகணபதி நகரில் நூறு ஆண்டுகள் பழமையான, வரசித்தி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த பகுதி, முன்னர், விவசாய சாகுபடி நிலமாக இருந்தது. விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்திருந்தனர். மழையில்லாமல் கடும் வறட்சியால், வேர்க்கடலை பயிர்கள் கருகி வாடின. கவலையடைந்த விவசாயிகள், ராஜகணபதி வரசித்தி விநாயகர் கோவிலில், ஆஞ்சநேய சுவாமியை வேண்டி, நல்ல மகசூல் கிடைத்தால், ஆண்டுதோறும் கடலை திருவிழா கொண்டாடுவதாக வேண்டினர். அதன்படி, நல்ல மழை பெய்து, கூடுதல் மகசூல் கிடைத்ததால், தேர்ப்பேட்டை பகுதி விவசாயிகள், வரசித்தி விநாயகர் கோவிலில், தொடர்ந்து, 55வது ஆண்டாக, புத்தாண்டு தினத்தன்று, கடலை திருவிழா கொண்டாடி வருகின்றனர். விழாவையொட்டி நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள், வேர்க்கடலையை கையில் ஒரு கைபிடி எடுத்து, ஆஞ்சநேயர் சன்னிதியில் வீசி வணங்கினர். விவசாயிகள், வேர்க்கடலையை மூட்டை, மூட்டையாக எடுத்து வந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். நேற்று ஒரு நாளில் மட்டும், 2 டன் வேர்க்கடலை, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.