பதிவு செய்த நாள்
02
ஜன
2013
10:01
திருத்துறைப்பூண்டி: புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸர் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், தீர்த்தவிடங்கர் என்றழைக்கப்படும் மரகதலிங்கத்துக்கு, அதிகாலை, ஐந்து மணி முதல் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் பூமகள், திருமகள் உடன் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 16 அடி உயர வைராக்கிய ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். இதேபோல, பொய்சொல்லா பிள்ளையார் கோவில், சிங்களாந்தி அமிர்தவள்ளி நாயகி உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவில், வேதை சாலையிலுள்ள வேத விநாயகர் கோவில், வேலூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில், தண்டளைச்சேரி நீநெறிநாதர் கோவில், கச்சனம் கைக்கிணேஸ்வரர் கோவில், திருக்கொள்ளிக்காடு கொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கும் அக்னீஸ்வரர் கோவில் உள்பட சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், வங்கார ஓடை ஐயப்பன் கோவில், சிவன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஸ்வாமிக்கு ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.