முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பாவை உபன்யாசத்தில், மூன்றாம் நாளான நேற்று அவர், பேசியதாவது; திருப்பாவையின் மூன்றாம் பாடல் பரம பவித்ரமானது. இந்த பாசுரத்தில் மந்திர மந்த்ரார்த்தம், அர்ச்சையின் பெருமை, அவதாரத்தின் பெருமை ஆகியவற்றை விளக்குவதோடு லோக ேஷமமும் என அனைத்தும் போற்றப்படுகிறது. முதல் பாசுரத்தில் பரமபதநாதனான ஸ்ரீமந்நாராயணனையும், 2ம் பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரந்தாமனான வியூக மூர்த்தியையும் பாடிக் கொண்டாடிய ஆண்டாள், 3ம் பாசுரத்தில் ஓங்கி உலகளந்து உத்தமன் ஆன விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமப் பெருமாளைக் கொண்டாடுகிறாள். வாமனனாய் வந்த பகவான், மஹாபலியிடம் மூன்று அடி மண் யாசித்து, த்ரிவிக்ரமனாக ஓங்கி வளர்ந்த வைபவத்தைச் சொல்லும் வண்ணம் ஆண்டாளும் மூன்றாவது பாசுரமாக வாமனாவதரத்தை அமைத்தது மட்டுமின்றி, திருப்பாவையின் ஒவ்வொரு பத்து பாசுரங்களிலும் ஒரு பாசுரத்தில் என்று மூன்று இடங்களில் த்ரிவிக்ரம அவதாரத்தை அனுபவித்துள்ளாள். பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன். பிறரும் வாழத் தானும் வாழ்பவன் மத்யமன். தான் அழிந்தாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன். தனக்கென்று வாழாமல் பரோபகாரியாக இருப்பவன் உத்தமன். இந்த நோக்கில், தான் அழிந்தாலும், பிறரை வாழ்விப்பவன் உத்தமன் என்றபடி பகவான் தான் குறு வடிவம் தாங்கி மாபலியிடம் இருந்து, மூவடி மண் பெற்று, த்ரிவிக்ரமனாய் வளர்ந்து மாவலியின் அகந்தையை அழித்து ஆட்கொண்டதால் இங்கு வாமனன் உத்தமன் ஆனான். இவ்வாறு அவர், உபன்யாசம் செய்தார். உபன்யாசம் நேரம் மார்கழி மாகோற்சவ உபன்யாசம் வரும் 14ம் தேதி வரை தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை உபன்யாசம் நடக்கிறது.