மார்கழி அதிகாலை பஜனை: காரமடையில் வீதிகளில் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 04:12
காரமடை: மார்கழி மாதம் தொடங்கியது. காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நான்கு ரத வீதிகளில் அதிகாலையில் ஆன்மீக பஜனைகள் பாடல்களுடன் வீதிகளில் வலம் வரும் சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர். இதில் பெண்கள் கோலமிட்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
காரமடையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். இங்கு அரங்கநாதர், ரங்கநாயகி தாயார், ஆண்டாள் ஆகிய மூன்று சுவாமிக்கும் தனி கோவில்களும், ஆஞ்சநேயர், சந்தான கிருஷ்ணன், சக்கரத்தாழ்வாருடன், 12 ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அரங்கநாதப் பெருமாள் முன், திருப்பாவை பாடல் பாடப்பட்டது.