அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜானும், அவரது மகள் ஜடா ஸ்கடரும் சென்னையில் வசித்தனர். ஒருநாள் இரவில் அவர்கள் வசித்த தெருவில் உள்ள ஒருவர் டாக்டரின் வீட்டு கதவைத் தட்டினார். ஜடா கதவை திறந்ததும், ‘என் மனைவி பிரசவ வேதனையால் துடிக்கிறாள். இங்கு டாக்டர் இருக்காராமே...’ எனக் கேட்டார். ‘ஆமாம். என் அப்பா தான் டாக்டர். இதோ வரச் சொல்கிறேன்’ என்றாள்.
‘வேண்டாம். மற்ற ஆண்கள் தன் உடம்பை தொடுவதை என் மனைவி விரும்ப மாட்டாள்’ எனச் சொல்லி புறப்பட்டார். பிரசவத்திற்கு உதவ பெண் டாக்டர் இல்லாததால் அந்த கர்ப்பிணி இறந்தாள். பிணத்தை எடுத்துச் செல்வதைக் கண்ட ஜடாவுக்கு கண்ணீர் வந்தது.
‘கர்ப்பிணிகள் யாரும் இறக்க அனுமதிக்க மாட்டேன்’ என மனதிற்குள் சபதமிட்டாள். அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து பட்டம் பெற்றாள். இந்தியாவுக்கு திரும்பிய ஜடா, பலருடைய உதவியால் வேலுாரில் மருத்துவமனையை கட்டினாள்.ஜடாவின் முயற்சியால் இளம் பெண்கள் பலர் நர்சுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டனர். இவரால் தொடங்கப்பட்டது தான் வேலுார் சி.எம்.சி. மருத்துவமனை.