பதிவு செய்த நாள்
27
டிச
2025
10:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் வரை சட்டப்போராட்டம் தொடரும், என, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது : திருப்பரங்குன்றம் முதல் படை வீடு கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் உருவாகும் முன் 3,000 ஆண்டுகள் பழமையானது. மலையில் இடைக்காலத்தில் உருவான தர்கா ஆக்கிரமிப்பை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இது குறித்த சர்ச்சை எழுந்து, லண்டன் பிரிவியூ கவுன்சிலில் பிரச்னை முடித்து வைக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் வீடு. குடைவரைக் கோயிலாக உள்ளது. ஒட்டுமொத்த மலையும் சிவனின் அம்சம். மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அங்கு 15 தீர்த்தங்கள் உள்ளன. தற்போது ஒரு தீர்த்தத்தை ஆக்கிரமித்து, பிறை போட்டு வேலி அமைத்துள்ளனர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு: சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தல விருட்சம் கல்லத்தி மரம். இது கோயிலுக்குள்ளும், மலை மீதும் உள்ளது. அந்த தலவிருட்சத்தில் முஸ்லிம்கள் சந்தனக்கூடு கொடி ஏற்றி இருக்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். சந்தனக்கூடு விழா நடத்தும் பேச்சு வார்த்தையில் ஹிந்து அமைப்பினர், பொதுமக்களை அழைக்கவில்லை. இது சட்ட விரோதம். திருப்பரங்குன்றம் மலையில் முஸ்லிம்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். மலையில் உள்ள சமணர் படுகையில் பச்சை பெயின்ட் அடித்தனர். புகார் கொடுத்ததும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை. சமணர் குகைகள், சுனைகள், தலவிருட்ச மரம் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கு தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் துணை போகின்றன. இது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த முருக பக்தர் பூர்ணசந்திரன் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தி.மு.க., அரசு தடுத்து விட்டது என்பதற்காக உயிரை தியாகம் செய்திருக்கிறார். தி.மு.க., வில் இருந்து ஒரு இரங்கல் அறிக்கை கூட இல்லை. பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும். அவர் குடும்பத்திற்கு பா.ஜ., ஹிந்து அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் கொடுக்கப்பட்டது என்றார்.
மலை மீது பிரியாணி சாப்பிடுகின்றனர்: பின் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்து திரும்பியவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது சந்தனக்கூடு என்ற போர்வையில் பிரியாணி சாப்பிடுவது கண்டிக்கத்தக்கது. போலீசாரிடம் கேட்டால் சோதனையிட்டோம், தடுத்து நிறுத்தினோம் என்கின்றனர். நாங்கள் தகராறு செய்ய வரவில்லை. இதற்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் மலை. அது சிக்கந்தர் மலை அல்ல. உள்ளூர் மக்கள் தீபம் ஏற்ற வேண்டும் என தினமும் இறைவனிடமும், அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். பிற மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மோடிக்கு ஆதரவு அளிக்கின்றனர். அதனால் மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் போன்றோர் வெறுப்பு பிரசாரம் செய்கின்றனர். ஹிந்து முஸ்லிம் கலவரம் உருவாக வேண்டும் என அவர் வேலை செய்கிறார் என்றார்.