பதிவு செய்த நாள்
04
ஜன
2013
11:01
மூணாறு: சபரிமலை செல்லும் வாகனங்களால், குமுளி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கம்பத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கேரளாவுக்குள் நுழையும் வெளி மாநில வாகனங்கள், குமுளியில் உள்ள மோட்டார் வாகனத்துறை செக்போஸ்ட்டில் பெர்மிட், ரோடு வரி செலுத்த வசதியுள்ளது. கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்குள் வாகனங்கள் நுழைவதால், இவற்றை வசூலிக்க முடியாமல், கேரள அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, பீர்மேடு அருகே குட்டிக்கானத்தில்,மோட்டார் வாகனத்துறை சார்பில், தற்காலிக செக் போஸ்ட் அமைத்து, பெர்மிட், ரோடு வரி வசூலிக்கப்படுகிறது.
கன்ட்ரோல் ரூம்: மகர விளக்கு காண வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, பீர்மேடு தாலுகாவில் 24 மணி நேரமும் செயல்படும் விதத்தில் கன்ட்ரோல் ரூம் திறக்க, இடுக்கி கலெக்டர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகத்தில், இன்று (ஜன.,4) முதல் கன்ட்ரோல் ரூம் செயல்படுகிறது. பக்தர்கள் 04869-253362, 85476 12910 முதல் 15 வரையிலான மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, குறைகளை தெரிவிக்கலாம். அவர்களின் பெயர், முகவரி, நேரம், கோரிக்கைகள் பதிவேட்டில் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.