திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் விழா நடந்து வருகிறது. அதன்படி, 6ம் தேதி அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று, பால்குடம் ஊர்வலம், பூவோடு ஊர்வலம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை முதல் பொங்கல் விழாவும், நாளை மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி, நேற்று இரவு, 7:00 மணிக்கு, பவளக்கொடி கம்பத்தாட்ட கலைக்குழுவின் கம்பத்தாட்ட நிகழ்ச்சி நடந்தது. l அவிநாசி ஒன்றியம், துலுக்கமுத்துாரிலுள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், 13ம் ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி, கிராம மக்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.