பதிவு செய்த நாள்
05
ஜன
2013
11:01
தூத்துக்குடி: சத்துணவை தொடர்ந்து அறநிலையத்துறை கோயில்களில் நடந்து வரும் அன்னதான திட்ட சமையலை ருசிகரமாக வழங்கவும், சிறப்பாக திட்டத்தை செயல்படுத்தவும் சமையல் பணியாளர்களுக்கு சமையல்கலை நிபுணர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல், முதலாக இந்த திட்டம் தமிழகத்தில் நெல்லை மண்டலத்தில் செயல்படுத்தப்படுகிறது.தமிழக அரசு சத்துணவு துறையில் முதல்வர் ஜெ.,அதிரடி மாற்றம் செய்துள்ளார். மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு நாளைக்கு ஒரு உணவு என்கிற வகையில் பல்வேறு வகையான கலவை சாதம், முட்டை மாசாலா போன்றவை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சத்துணவு சமையல் பணியாளர்களுக்கு சமையல் கலை நிபுணர் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்வரை பொறுத்தமட்டில் கோயில்களின் அன்னதான திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 450க்கும் மேற்பட்ட கோயில்களில் பக்தர்கள், ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இலவச அன்னதானம் நடந்து வருகிறது. இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வயிறாற சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். நெல்லை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையராக அன்புமணி பொறுப்பேற்றுள்ளார். இவர் துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோரின் அறிவுரையை பெற்று நெல்லை மண்டலத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.இணை ஆணையராக அன்புமணி பதவி ஏற்றவுடன் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு சென்று விசிட் செய்தார். மொத்தம் இந்த மூன்று மாவட்டங்களில் 55 கோயில்களில் தமிழக முதல்வரின் இலவச அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடக்கும் அனைத்து கோயில்களிலும் சென்று அன்னதானம் எந்த வகையில் போடப்படுகிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்தார். அன்னதான திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சுவையை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும் எண்ணினார்.
இது குறித்து சென்னை அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதி இணை ஆணையர் அன்புமணி அனுமதியும் பெற்றார்.இது குறித்து தூத்துக்குடியில் நேற்று திருப்பாவை, திருவெம்பாவை பள்ளி மாணவ, மாணவிகளுக்குரிய போட்டியை துவக்கி வைக்க வந்த நெல்லை மண்டல இணை ஆணையர் அன்புமணி கூறியதாவது;அன்னதான திட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்தவும், உணவுகளை சுவையாக சமைக்கும் வகையில் ஒரு கோயிலில் அன்னதான சமையல் செய்யக் கூடிய சமையலர் மற்றும் அவரது உதவியாளர் இருவர் வீதம் மொத்தம் நெல்லை மண்டலத்தில் அன்னதானம் நடக்கும் 55 கோயில்களில் உள்ள 110 பணியாளர்களுக்கு சமையல் கலை பயிற்சி வரும் 7ம் தேதி தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மண்டலத்தில் நடக்கிறது. ஆர்யாஸ் கேட்டரிங் கல்லூரியில் உள்ள சமையல் கலை நிபுணர்கள் இதற்கான பயிற்சியை இவர்களுக்கு அளிக்கின்றனர். உதாரணமாக சாம்பார் தயாரிப்பதற்கு சாம்பாரில் இந்த வகையான காய்கறிகளை மட்டும் போட்டால் தான் சுவையாக இருக்கும். ஆனால் சமையல் செய்வோர் இருக்கிற காய்கறிகளை எல்லாம் வெட்டி போட்டு சாம்பார் தயாரித்து விடுவர். காமினேசன் மாறிவிட்டால் டேஸ்ட் தானாக போய்விடும். இதனைத் தான் சமையல் கலை நிபுணர்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.வரும் 7ம் தேதி ஒரு நாள் நெல்லை இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு பின்னர் அன்னதானம் இன்னும் சிறப்பாகவும், சுவையும் அதிமாக இருக்கவும் வாய்ப்பு ஏற்படும். தேவைப்பட்டால் சமையலர்கள் விருப்பத்தை பொறுத்து கூடுதல் பயிற்சி அளிக்கவும் அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. கோயிலில் இலவச அன்னதானம் சாப்பிடுபவர்கள் சிறப்பாக சாப்பாடு மிகவும் டேஸ்ட் ஆக உள்ளது என்று சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இனிமேல் அன்னதானம் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அன்புமணி தெரிவித்தார். தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் உடனிருந்தார்.