திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம், காவிலிபாளையம் (25வது வார்டு) ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
கோவில்களுக்கு திருப்பணியை நிறைவு செய்து, கும்பாபிஷேக விழா பூஜைகள், 18ம் தேதி துவங்கியது; முதல்கால வேள்வி பூஜை, 19ம் தேதி துவங்கியது. காலை, முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த, 20ம் தேதி, காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலை, மூன்றாம் கால வேள்வி பூஜையும் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. நேற்று நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் நிறைவுவேள்வியை தொடர்ந்து, காலை, 6:30 மணி முதல், 7:20 மணிக்குள், விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது; பக்தர்கள் அனைவரும் விநாயகரை வழிபட்டனர். தொடர்ந்து, காலை, 7:25 மணிக்கு, மாரியம்மனுக்கு நான்காம் கால வேள்வி பூஜையும், காலை, 9:15 முதல், 10:00 மணிக்குள், மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள், ‘ஓம் சக்தி...பராசக்தி...’ என்று கோஷமிட்டபடி அம்மனை வழிபட்டனர். காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, செல்வ விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு, மகா அபிஷேகம், அலங்காரம், தசதானம், தசதரிசனம், உச்சிகால பூஜைகள் விமரிசையாக நடந்தன. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் மற்றும் காவிலிபாளையம் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.