சுசீந்திரம் கோயிலில் வரும் 11ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2013 10:01
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு வரும் 11ம் தேதி நடைபெறும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி சுசீந்திரம் கோயிலில் துவங்கியது. லட்டு தயாரிக்கும் பணியில் 70 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பிரசித்தி பெற்றவராக கருதப்படுகிறார். சுவாமியை நேரில் பார்க்கும் போது சாந்த மூர்த்தியாகவும், இடது அல்லது வலது புறத்திலிருந்து பார்க்கும் போது ஆக்ரோஷ மூர்த்தியாகவும் காட்சி தருகிறார். ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேக அலங்கார காட்சியை பார்த்து கைகூப்பி வணங்கி நேர் எதிரே நிற்கும் விதமாக காட்சிதரும் ஆஞ்சநேய சுவாமிக்கு சுசீந்திரம் கோயிலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளும், சிற்பங்களும் உள்ளன. ஆஞ்சநேய சுவாமிக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்துள்ள சுசீந்திரம் கோயிலில் வரும் 11ம் தேதி சுவாமிக்கு ஸ்ரீ ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் பொருட்டு ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணியை பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது. இதற்காக கோயில் அன்னதான மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கும் இப்பணியில் 70 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி லட்டு போல் தயாரிக்கப்பட்டு வரும் இப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. ஜெயந்தி விழாவன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் அபிஷேகம் மற்றும் புஷ்பாபிஷேகம் விழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சுவாமியின் பிரசாதம் கிடைக்க வேண்டி காலை 9 மணி வரை பஞ்சாமிர்தமும் அதை தொடர்ந்து லட்டு பிரசாதம் இரவு 10 மணி வரை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவன்று காலை 6 மணி முதல் ஷோடச அபிஷேகம், மாலை 6 மணி முதல் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், ஸ்ரீ ராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்டியினரும் செய்து வருகின்றனர்.