பதிவு செய்த நாள்
09
ஜன
2013
10:01
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு, அரசு போக்குவரத்துக் கழகம் அருகே தேங்கி நிற்கும் குப்பையை அகற்ற மாநகராட்சி முன் வராததால், ஐயப்ப பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்கு, என்று தான் விடிவு கிடைக்குமோ தெரியவில்லை. நகர்நல பிரிவிடம் இருந்த துப்புரவுப் பணி, பொறியாளர் பிரிவுக்கு மாற்றினர்; அடுத்து சில மாதங்களிலேயே மீண்டும் நகர்நல பிரிவுக்கு மாற்றப்பட்டது. இப்படி, துப்புரவு பணி பல பிரிவுகளை பார்க்கிறதே தவிர, விடிவுக்கு வழியில்லை. வார்டு குப்பையை அகற்றுவதில் தான் மெத்தனம் என்றால், சீசன் பணிகளையாவது, பார்க்க வேண்டாமா? ஐயப்ப பக்தர்கள் வருகையில், நகர் முழுவதும் வாகனங்களாய் நிரம்பி வழிகிறது.பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே, ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு குவியும் குப்பையை, முறையாக அப்புறப்படுத்துவதில்லை. "கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தையாய் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், குவிந்துள்ள குப்பையில் நடந்து செல்வது, காண்போரை வருத்தமடையச் செய்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதேநிலை மாநகராட்சி கமிஷனர், மேயர் வீடுகளுக்கு முன் இருந்தால், இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பார்களா?வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், மாநகராட்சியை எடை போட, அங்குள்ள குப்பையே சாட்சி. "உதவிப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு கண்காணிப்பாளர், துப்புரவுப் பணியாளர், குப்பை அள்ளும் வாகனம், என, வார்டு வாரியாக பணியாளர்கள் இருந்தும், "சீசன் நடவடிக்கைக்கு கூட, அவர்களுக்கு மனமில்லை. இவர்களிடம் வழக்கமான பணியை, எப்படி எதிர்பார்க்க முடியும்? தினமும் ஆய்வு மேற்கொள்ளும் கமிஷனர் நந்தகோபால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இது போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.