பதிவு செய்த நாள்
09
ஜன
2013
11:01
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று முதல், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாரியூர் குண்டம் திருவிழா நாளை நடக்கிறது. குண்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். கோவில் அருகில் ஓடும் தடப்பள்ளி வாய்க்காலில் குளித்த பிறகு, குண்டம் இறங்குவது வாடிக்கையாக உள்ளது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால் தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. வாய்க்கால் வறண்டு காணப்படுவதால், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த குண்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் அடிப்படையில் தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு, 500 கன தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் வரும் தண்ணீரை உறிஞ்சி விடுதல், மதகுகளில் எடுக்காத வண்ணம் பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொடிவேரி அணையில் இருந்து கோவில் வரையில் உள்ள, 20க்கும் மேற்பட்ட மதகுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரி கூறுகையில், ""பாரியூர் கோவில் குண்டம் திருவிழாவுக்காக பவானிசாகர் அணையில் இருந்து, 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுக்காத வகையில், அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாயத்துக்கு எடுக்க முடியாது, என்றார்.