மகா சிவராத்திரி: புதுப்பொலிவு காணும் குலதெய்வ கோயில்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 10:02
ராஜபாளையம்; ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோயில்கள் புதுப்பொலிவு பெற தொடங்கி உள்ளது.
ராஜபாளையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுற்றுவட்டார குலதெய்வ கோயில்கள், கிராம கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும். நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் சுற்றிலும் பராமரிப்பு செய்து வண்ணம் தீட்டி பக்தர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பர். அமெரிக்கா, இங்கிலாந்து, என தொலைதுாரத்தில் வசித்தாலும் மூதாதையர் வாழ்வை வழிகாட்டிய குலதெய்வ கோயிலை மறக்கும் சூழல் ஏற்படாமல் இருக்க வருடம் ஒரு முறை மகா சிவராத்திரி அன்று குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து குலதெய்வத்தை காண வருவதுடன் பராமரிப்பின்றி காணப்படும் கோயில் வளாகம் சுற்றுப்பகுதிகளில் புதர்களை அகற்றி வண்ணம் தீட்டி புது பொலிவுடன் மாற்றி வைப்பதுடன் நிகழ்ச்சி அன்று இரவு முழுவதும் நடக்கும் சிறப்பு வழிபாட்டிற்காக மின் விளக்குகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதற்காக கிராம கோயில்கள் பராமரிப்பு செய்து தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவதுடன் முழுவதும் தங்கி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். ராஜபாளையம் புரசம்பாறை, கம்மாபட்டி, ஆவரம்பட்டி, மடத்துப்பட்டி, கிருஷ்ணாபுரம், தென்றல் நகர், ஜமீன் கொல்லங் கொண்டான், செண்பகத்தோப்பு ரோடு, அய்யனார் கோயில் உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குலதெய்வ கோயில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வருவர். நிகழ்ச்சியை முன்னிட்டு இரவு முழுவதும் பூஜை நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி கோயிலை சுற்றிலும் மின்விளக்கு ஏற்பாடு செய்து கிராம கோயில் கடை புது பொலிவுடன் மாற்றி சிவராத்திரியை வழிபட காத்திருக்கின்றனர்.