பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் குண்டத்தில் இன்று இறக்குவதற்காக வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று முன்தினம் இரவில் இருந்தே கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபியில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா டிச., 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஜன., 4ம் தேதி தேர் வெள்ளோட்டம், 7ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. நேற்று மாவிளக்கு பூஜை, காப்பு கட்டுதல், பூத வாகன காட்சியும் நடந்தன. நேற்று இரவு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று குண்டம் திருவிழா நடப்பதை முன்னிட்டு கோவிலில், பத்து டன் விறகு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் விறகுகளை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். கோபி, ஈரோடு, மைசூரு, திருப்பூர், தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர், கவுந்தபாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டு வரிசையில் காத்திருந்து, குண்டம் இறங்க உள்ளனர். குண்டம் இறங்கும் பக்தர்கள் தடப்பள்ளி வாய்க்காலில் குளித்த பிறகு, குண்டம் இறங்குவர்.
நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது. பக்தர்களின் வசதிக்காக பவானிசாகர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று மாலை கோவில் வழியாக செல்கிறது. சத்தியமங்கலம் மலைப்பகுதி மற்றும் மைசூரு, தாளவாடி உள்ளிட்ட வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் குண்டத்தில் இறங்க நேற்று முன்தினம் இரவே கோவில் வளாகத்தில் குவிந்தனர். குண்டம் இறக்கும் இடத்தில் இருந்து, கோவிலில் இடதுபுறத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சாரத்துக்குள் ஆண், பெண் பக்தர்கள் தனித்தனி வரிசையில் அமர்ந்துள்ளனர். பக்தர்களின் உறவினர்கள், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்துக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவில் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டம் இறக்கும் பக்தர்கள் காயம் அடைந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கோபி அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தவிர சுகாதார துறையினரும், கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. குண்டம் திருவிழாவுக்கு பக்தர்கள் குவிவதால் பாரியூர் கோவில் திருவிழா நேற்று முதல் களை கட்ட துவங்கி உள்ளது. நாளை தேரோட்டமும், 12ம் தேதி மாலை, 4 மணிக்கு தேர் நிலை அடைதல், இரவு மலர் பல்லக்கு ஊர்வலமும் நடக்கிறது. 13ம் தேதி தெற்போற்சவம், 14, 15ம் தேதி கோபியில் மஞ்சள் உற்சவம், 16, 17ம் தேதி புதுப்பாளையத்தில் மஞ்சள் உற்சவம், 18, 19ம் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் உற்சவமும், 19ம் தேதி அம்பாள் மலர் பல்லக்கில் கோவில் வந்தடைதல் மற்றும் மறுபூஜை நடக்கிறது.