பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முடி சேகரிப்பதற்கான உரிமை 81 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை சேகரிப்பதற்கு ஒரு ஆண்டுக்கான (13 நாள் திருவிழா நீங்கலாக) குத்தகை டெண்டர் ஏலம் நடந்தது. மேல்மலையனூர் கோவில் அலுவலகத்தில் நேற்று பகல் 2.30 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஜோதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. முதலில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் டெபாசிட் தொகையாக 25 லட்சம் ரூபாயை கட்டியிருந்த குமார், மனோகரன், கணேஷ் ஆகியோர் ஏலம் கேட்டனர். குமார் அதிக பட்கமாக 80 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதையடுத்து மூடி சீல் வைக்கப்பட்டிருந்த டெண்டர் பெட்டியை திறந்தனர். இதில் ஆனந்தன் என்பவர் 80 லட்சம் ரூபாய்க்கும், ராஜேஷ் என்பவர் 81 லட்சம் ரூபாய்க்கும் தொகையை குறிப்பிட்டிருந்தனர். பகிரங்க ஏலத்தை விட டெண்டர் பெட்டியில் இருந்த ராஜேஷின் டெண்டர் தொகை அதிகமாக இருந்ததால், 81 லட்சம் ரூபாய்க்கு ராஜேஷûக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. டெண்டரின் போது அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி, மேலாளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு முதலில் நடந்த டெண்டரில் 39 லட்சம் முடிவானது. கோர்ட் உத்தரவினால் இரண்டாவது முறை நடந்த டெண்டரில் 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11 லட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் போய் உள்ளது.