விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று இரண்டாம் நாள் விழாவாக மயானகொள்ளை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 9.45 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பாடானது. அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் பிரம்ம கபாலத்தை எடுத்து ஆடி வந்தனர். வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை அம்மன் மீது வாரி இறைத்தனர். சேவல்களை காணிக்கையாக செலுத்தினர். 10.15 மணிக்கு அங்காளம்மன் மயானத்திற்கு வந்ததும், அங்க பக்தர்கள் குவித்து வைத்திருந்த காய்கனிகள், பழங்கள், தாணியங்கள், உணவு பொருட்களை படையலிட்டு பூசாரிகள் கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாட வீதிவழியாக அம்மனை கோவிலுக்கு கொண்டு வந்தனர். விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளா இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்தனர். எஸ்.பி., சாய் பிரணீத் மேற்பார்வையில், செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.