பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
சபரிமலை: சபரிமலை மகரவிளக்கு பெருவிழா முன்னோட்டமாக, அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நிறைவு பெற்றது. இன்று, பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில், ஜன., 14 ல், மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. சில ஆண்டுக்கு முன், புல்மேட்டில் நடந்த கோர விபத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட ஹரிஹரன்நாயர் கமிட்டி அளித்த சிபாரிசுகள், இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. மகரஜோதியில், பக்தர்கள் தரிசனம் செய்யும் இடங்களுக்கு ஏற்ற வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேட்டைதுள்ளல் நிறைவு:கார்த்திகை 1 முதல், எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடந்தாலும், மகரவிளக்குக்கு முன் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு, பேட்டை தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் யானைகளுடன் பேட்டைத்துள்ளினர்; எருமேலி பள்ளிவாசல் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். ஆலங்காடு பக்தர்கள், மாலை 3 மணிக்கு பேட்டை துள்ளினர். திருவாபரணம்:மகரவிளக்கு நாளில், ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படும். காலை முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் திருவாபரணங்கள், பிற்பகல் 12 மணிக்கு, பேடகங்களில் வைக்கப்பட்டு புறப்படும்; ஜன., 14 மாலை, சன்னிதானம் வந்தடையும். மகரவிளக்குக்கு முன், பிராசாத சுத்தி பூஜைகள் இன்று நடக்கின்றன.