பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
பொள்ளாச்சி: பொங்கல் பண்டிகை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடந்தது. பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். கல்லூரி தலைவர் விஜயமோகன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி அடுத்த பூசாரிபட்டி பொள்ளாச்சி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் ரத்தினம் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக, மாணவிகள் முளைபாரிகளை எடுத்து கொண்டும், மாணவர்கள் தேவராட்டம் ஆடியும், கும்மி போட்டும் கல்லூரி வளாகம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர். பொள்ளாச்சி, உடுமலை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், கரகாட்டம், கும்மியாட்டம், தேவராட்டம், கோலாட்டம், மானாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு முறுக்கு கடித்தல், வழுக்குமரம் ஏறுதல், உரி அடித்தல், கயிறு இழுத்தல், மூன்று கால் ஓட்டம், சாக்கு ஓட்டம், வட்டத்திற்குள் கல் பொறுக்குதல், பம்பரம் விடுதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கல்லூரி மாணவர்களுக்கு தனியாக சேவற்கட்டு, இளவட்டக்கல் தூக்குதல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போட்டிகள் நடந்தது. போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில், மாணவியர் பொங்கல் பானைகளில் புது அரிசியை போட்டு பொங்கல் வைத்தும், குலைவை இட்டும் விழாவை கொண்டாடினர். விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில், கிராமத்தின் சிறப்பை விளக்கும் வகையில், இடம் பெற்றிருந்தன. அங்கலக்குறிச்சியிலுள்ள கே.எம்.ஜி., கல்வியியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரி மைதானத்தை விவசாய நிலத்தை போல் வடிவமைத்திருந்தனர். அங்கு பட்டி அமைத்து, அதில் தண்ணீர் விட்டிருந்தனர். பட்டிக்கு மலர் மாலை அணிவித்து சானத்தில் பிள்ளையார் செய்து வைத்தனர். அதன் மேற்பகுதியில் கரும்புகளை முக்கோண வடிவில் அமைத்து, அதன் அருகே அடுப்பு வைத்து அதில் தீ மூட்டி, பனை வைத்து, அதில் பொங்கலை பொங்கச்செய்தனர். அதன் பின்பு மாடுகளை அழைத்து வந்து பட்டிமிதித்து, மாடுகளுக்கு பொங்கலூட்டியும், மாணவர்களுக்கு பொங்கலை பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தனர். இதற்காக கல்லூரி முழுக்க வண்ண காகிதங்களால் அழகுபடுத்தப்பட்டு, பொங்கலிடும் பகுதியில் வண்ண ரங்கோலி கோலமிட்டு, மலர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. பொங்கல் விழாவில் கல்லூரி செயலர், முதல்வர், மாணவர், மாணவியர் பங்கேற்றனர். கோவை ரோட்டிலுள்ள சுபாஷ் கலை அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி மைதானத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ரங்கோலி, சாக்குஓட்டப்போட்டி, கபடி, ஊசிநூல் கோர்த்தல், எலுமிச்சை ஸ்பூன், மெகந்தி, சமையல் செய்தல் போன்ற போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு இசைநாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.