பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
நகரி: திருமலை வெங்கடேச பெருமாளை தரிசிக்க பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, "திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி, திருமலை கோவிலுக்கு, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு வழியாக பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள், விரைவாக சாமி தரிசனம் செய்ய வசதியாக, காலிகோபுரம் அருகேயுள்ள தேவஸ்தான கவுன்டரில், "திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் நள்ளிரவு, 12:00 மணி முதல், மறு நாள் மாலை, 5:00 மணி வரை வழங்கப்பட்டு வந்தன. இதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாலை, 5:00 மணி என்பதற்கு பதிலாக, இரவு, 8:30 மணி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இருந்தாலும், திவ்ய தரிசன டோக்கன்கள், ஒரு நாளைக்கு, 15 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.