திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆழி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2026 10:03
திருவாரூர்; உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 29ம் தேதி ஆழி தேரோட்ட விழா நடைபெறுகிறது.
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் பங்குனி உத்திரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.இந்த கோவில் ஆழி தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் எனும் பெயர் பெற்றது.இந்த தேர் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்று தேர் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பங்குனி உத்திர பெருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த வருட பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 29ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெற உள்ளது.இந்த தேரோட்டம் நடைபெறுவதையொட்டி இன்று மகா துவாஜாரோகணம் என்று அழைக்கப்படும் கொடியேற்று விழா விமர்சையாக நடைபெற்றது.சிறப்பு யாகபூஜையுடன் 54 அடி உயரமுள்ள கொடி மரத்துக்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலை அணிவிக்கபட்டது.அதனை தொடர்ந்து உகொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மங்கள இசையுடன் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் நந்தி உருவம் பொறித்த 30 மீட்டர் நீளமுடைய உற்சவ கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டது.இந்த கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.