பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
கும்பகோணம்: சாரங்கபாணி கோவிலில் வரும், 14ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல், மூன்றாவது தேசம் என போற்றப்படும் திருக்கோவிலாக, கும்பகோணம் சாரங்கபாணி ஸ்வாமி திருக்கோவில் திகழ்கிறது. ஹேமரிஷியின் மகளாக வளர்ந்து கொண்டிருந்த (லட்சுமியை) கோமளவல்லி தாயாரை, இத்தலத்திற்கு மகர சங்கராந்தியன்று, வைதீக விமானத்துடன், கையில் சாரங்கம் எனும் வில்லுடன் வந்திறங்கிய திருமால் மணந்து, இங்கு எழுந்தருளியுள்ளதாக புராணம் கூறுகிறது.பேயாழ்வார், பூதத்தாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம் என்ற சிறப்புடையது.இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில், பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த விழாவில் சங்கரமண பிரம்மோத்ஸவ விழா, கடந்த, 6ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து நடந்த விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.கடந்த, 8ம் தேதி காலை பல்லக்கு வீதியுலாவும், மாலையில் வெள்ளி கருட சேவையும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெள்ளி அனுமந்த வாகனத்தில் வீதியுலா நடந்தது. நாளை காலை வெண்ணைத்தாழி சேவையும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது.
இவ்விழாவின் முக்கிய விழாவான திருத்தேரோட்டம், வரும், 14ம் தேதி காலை, 6.45 மணிக்கு மேல், 7.30 மணிக்குள் நடக்கிறது. அதையடுத்து பகலில் கரத்தாழ்வார், கரவரத்தித்திருமகன் எழுந்தருளி, பொற்றாமரையில் தீர்த்தவாரி கண்டருளி உத்ராயணவாயில் கதவு திறப்பு நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 10 மணிக்கு பெருமாள் திருவடித் திருமஞ்சனமும், திருவாராதனம் கண்டருளலும், இரவு ஹேம புஷ்கரணியில் கனு உத்சவமும், மற்ற சந்நிதி தாயார்களுடன் கோமளவல்லி தாயார் புறப்பாடும் நடக்கிறது.அதைத்தொடர்ந்து திருப்பாவை சாற்று முறை பெருமாள் சப்தாவர்ண வீதிபுறப்பாடு நடக்கிறது. பின்னர் கொடியிறக்கப்படுகிறது. இவ்விழாவின் முக்கியவிழாவான பொங்கலன்று திருத்தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, சிறிய தேர் அலங்கரிக்கும் பணி துவங்கியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஆசைத்தம்பி, செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.