பதிவு செய்த நாள்
12
ஜன
2013
10:01
புதுச்சேரி: திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ் சாலை, பஞ்சவடீயில், 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 8ம் தேதி காலை அனுமன் லட்சார்ச்சனை நடந்தது. தினம் காலை, மாலையில் விசேஷ ஹோமம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணி முதல், 7.30 மணி வரை இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 36 அடி உயர ஆஞ்ஜநேய சுவாமி மூலவருக்கு, ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின், மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பட்டு, ஸ்ரீராமர் பாதுகை, ஆஞ்ஜநேய சுவாமி மூலவர், உற்சவர் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணி முதல் மதுபாலகிருஷ்ணன் குழுவினரின் பக்திப் பாடல் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு சீதாராம திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை 10 மணி முதல் 5, 000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.