வனத்திற்கு மத்தியில் பழமை வாய்ந்த பழங்குடியினர் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 01:03
பந்தலூர்; பந்தலூர் அருகே முக்குப்பாடி பழங்குடியின கிராமத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் திருவிழாவில் பழங்குடியின மக்கள் குடும்பங்களுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பந்தலூர் அருகே முக்குப்பாடி பகுதியில், காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன், குளியமுத்தப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி குலதெய்வ கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து 10-ம் தேதி காலை பூஜகர்கள் கோபி, மாதன் தலைமையில் சிறப்பு பூஜைகளுடன், துவங்கிய நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை., இசைக்கப்பட்டு கோவில் நிர்வாகிகள் மற்றும் சாமி ஆடிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோழி பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் குளிய முத்தப்பன் மற்றும் மாரியம்மன் வேடமணிந்து, அன்னு, கிட்டன் ஆகியோர் சாமி ஆடி, பக்தர்கள் வழங்கிய நாணயத்தை தெய்வத்தின் முன்பாக வைத்தும், தேங்காய் உடைத்தும் அருள்வாக்கு கூறியதுடன், பச்சரிசியை பிரசாதமாக வழங்கினார்கள். விழா குறித்து கமிட்டி செயலாளர் சந்திரன் கூறுகையில், பழங்குடியின மக்கள் வனத்தை தெய்வமாக கருதி வழிபட்டு வருகிறோம். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு கிராமத்தின் வனப் பகுதியில் அமைந்துள்ள கோவிலில், பழங்குடியின மக்கள் விவசாயம் செய்து கொண்டு வரும் விளைவு பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து, நன்றி தெரிவிக்கப்படுகிறது. இதில் அனைத்து பழங்குடியின கிராமங்களில் இருக்கும் மக்கள் பங்கேற்பதால், உறவினர்களைப் பார்த்து நலம் விசாரித்து, தங்கள் குடும்பத் தொடர்புகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி முக்கிய காரணமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் இசை மற்றும் நடனம் இடம்பெற்றது. இதில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று இறைவனை வழிபட்டனர். ஏற்பாடுகளை தலைவர் குட்டன், செயலாளர் சந்திரன், பொருளாளர் அருண் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.