பதிவு செய்த நாள்
27
மார்
2026
10:03
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ‘அயோத்தியில் எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை’ என பாடினார். இது பற்றிய கதை ஒன்று உண்டு. அயோத்தியை சேர்ந்த நவரத்தின வியாபாரி ஒருவரின் மகள் தன் திருமணத்திற்காக முத்துமாலை ஒன்றை மகாராணி சீதைக்கு பரிசாக கொடுத்தாள். தன் திருமணத்திற்கு சீதையை வருமாறு அழைத்தாள். அதற்கு சீதை, ‘‘என்னிடம் நகைகள் உள்ளன. இதை யாராவது ஏழைக்கு கொடு’’ என்றாள். கொண்டு வந்ததை வீட்டுக்கு கொண்டு செல்ல மனமில்லாமல், யாராவது எடுத்துச் செல்லட்டும் என்ற எண்ணத்தில் அரண்மனை வாசலில் விட்டுச் சென்றாள். ஆனால் மாலையை யாரும் எடுக்கவில்லை. ஏனென்றால் அயோத்தி மக்கள் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்கள். இப்படி ஒரு நல்ல ஆட்சியை நடத்தியவர் ஸ்ரீராமர். தினமும் அவரை வழிபடு. ராம ராஜ்ஜியம் அமையும்.
(அயோத்தி மக்கள் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்கள். இப்படி ஒரு நல்ல ஆட்சியை நடத்தியவர் ஸ்ரீராமர்) போல்ட்
மனதில் சுமந்தவள்: ஸ்ரீராமரை இந்த உலகுக்கு கொடுத்தவர் கோசலை. ஆனால் இவளுக்கு முன்பே ஸ்ரீராமருக்கு ஒரு அம்மா இருந்தாள். ராவணனை அழிக்க நிகழ்ந்தது ராமாவதாரம். ஆனால் அவர் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும். ஆம். விதியின் வலிமையால் மனைவியைக் ‘கல்லாகப் போ’ என சபித்தார் கவுதமர். அதற்கு அவரே ஒரு வழியும் சொன்னார். ‘ராமனின் பாதத்துாளி (துாசு) பட்டதும் பெண்ணாக மாறுவாய்’ என அகலிகைக்கு வரம் கொடுத்தார். ஸ்ரீராமர் எப்போது வருவாரோ என மனதில் அவரை சுமந்து கொண்டிருந்தாள். முனிவரின் வாக்கின்படி ஸ்ரீராமரும் வந்தார். விமோசனமும் தந்தார். ஸ்ரீராமரை மனதில் சுமந்தவள் அகலிகை. வயிற்றில் சுமந்தவள் கோசலை.
சேர்ப்போமே புண்ணியத்தை...: நல்லவர்களுக்கு உதவி செய்தால் அதை, ‘ஸ்ரீராமருக்கு அணில் உதவியது போல’ எனச் சொல்வர். இது எப்படி வந்தது? சீதையை மீட்க இலங்கைக்கு கடல் கடந்து செல்ல வேண்டும். அதற்காக குரங்குகள் கடல் மீது பாறைகளை மிதக்க விட்டு பாலம் கட்டிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அணிலுக்கு ஏக்கமோ ஏக்கம். ‘நம் தலைவன் ஸ்ரீராமருக்கு நம்மால் உதவி செய்ய முடியவில்லையே’ என தவித்தது. உடனே கடல் நீரில் தன் உடலை நனைத்தபடி மணலில் புரண்டது. பிறகு குரங்குகள் அடுக்கிய பாறைகளின் இடுக்கில் போய் நின்றது. உடல் மீது ஒட்டியுள்ள மணலை உதிர்த்தது. தன்னால் முடிந்த உதவியைச் செய்து புண்ணியத்தை தேடிக் கொண்டது அணில். இதைப் பார்த்த மற்ற அணில்களும் பாலம் கட்டும் பணியில் இறங்கின. இதைப் போல நம்மால் முடிந்த நல்லதைச் செய்து புண்ணியத்தை சேர்ப்போமே.
ராமாயணத்தை படி: ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாறு நம்மாழ்வாரின் பாடல்கள். இதில் பெருமாளின் மகிமை, திருவிளையாடல், அவதாரச் சிறப்பு பற்றி கூறியுள்ளார். ஸ்ரீராமரின் பெருமை பற்றி அவர் பாடியதை நாமும் கேட்போமா...
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
படித்தால் ராமாயணத்தை மட்டும் படி. பிரம்மாவின் படைப்பில் அயோத்தியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் புண்ணியசாலிகள்.