பழநியில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் துவக்கம்: சித்ரா பவுர்ணமி வெள்ளி தேரோட்டம்
பதிவு செய்த நாள்
09
ஏப் 2026 05:04
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.22ல் துவங்க உள்ளது. பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதன்பின் லட்சுமி நாராயண பெருமாள் வீதி உலா நடைபெறும். விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு மேல் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச் சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடைபெறும். ஏழாம் நாள் திருவிழாவில் ஏப்.28., இரவு 7:29 மணிக்கு மேல் இரவு 8:29 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் ஏப்.30., காலை 8:31 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.1., இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும். சித்திரை பவுர்ணமி: பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30.,ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருள்வர்.மே.1., சித்ரா பவுர்ணமி அன்று காலை 8:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருதல் நடைபெறும். அதன் பின் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் எழுந்தருவர். ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறும். நிகழ்ச்சியினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
|