பதிவு செய்த நாள்
17
ஜன
2013
10:01
ராய்ப்பூர் : ""சத்தீஸ்கர் மாநிலத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, நாட்டின் முக்கிய புனித தலங்களை சுற்றி பார்க்க இலவச ரயில் பயண வசதி ஏற்படுத்தி தரப்படும், என, முதல்வர், ராமன் சிங் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த, முதல்வர், ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்துக்களின் புனித தலங்களை சுற்றி பார்க்க, மூத்த குடிமக்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 25 ஆயிரம் பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் புனித யாத்திரை, சில நாட்களுக்கு முன் துவங்கியது. 1,000 மூத்த குடிமக்கள், மகாராஷ்டிராவில் உள்ள, ஷீரடி, ஷனி ஷிக்னாபுர் மற்றும் திரியம்பகேஸ்வர் போன்ற, ஆன்மிகத் தலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களை வரவேற்க, ராய்ப்பூர் ரயில் நிலையத்திற்கு ஜன 16 வந்திருந்த, முதல்வர், ராமன் சிங் கூறியதாவது: ஆண்டுக்கு, 25 ஆயிரம் மூத்த குடிமக்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்குகிறோம்; அடுத்த ஆண்டிலிருந்து, 50 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர். 60 வயது நிரம்பியவர்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், நாட்டின் அனைத்து புனித தலங்களையும், ரயிலில், இலவசமாக சென்று வர, இந்திய ரயில்வே துறையுடன் பேசி வருகிறோம். அனுமதி கிடைத்தால், அடுத்த ஆண்டு முதல் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு, முதல்வர் ராமன் சிங் கூறினார்.