பதிவு செய்த நாள்
17
ஜன
2013
10:01
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 26ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாதம் நடக்கும் பூபதி திருநாள் எனப்படும், தைத்தேர் திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த விழா, நாளை காலை, 6.20 முதல், 7 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நான்காம் நாளான, 21ம் தேதி மாலை, 6 மணிக்கு நம்பெருமாள் கருட வாகனத்திலும், 24ம் தேதி திருச்சிவிகையிலும், உபயநாச்சியார்களுடன், பூந்தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். அன்று நம்பெருமாள் நெல் அளவு கண்டருளகிறார். 8ம் திருநாளான, 25ம் தேதி குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்கிறார். முக்கிய திருவிழாவான தைத்தேரோட்டோம், 26ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, 3.30 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியாருடன் புறப்படுகிறார். 4 மணிக்கு தைத்தேர் மண்டபத்தை அடைகிறார். 5.50 முதல், 6.20 மணிக்குள் மகர லக்னத்தில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். 6.30 மணிக்கு தேர்வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது. கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஏற்பாடுகளை செய்து வருகிறார். திருக்கல்யாண உற்சவ விழா கரூர்: பண்டரிநாதன் கோவிலில், 91ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில் ஆண்டு தோறும், தை மாதம் திருக்கல்யாண உற்சவம் நடந்து வருகிறது. நடப்பாண்டு ஜன 15 காலை, 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சிறப்பு பூஜையுடன் துவங்கியது. 10 மணிக்கு ஸ்ரீ பண்டரிநாதன் ஸ்வாமிக்கும், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஸ்வாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. மஹா தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.