பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவை ஒட்டி, ஜன 16 தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த, 8ம் தேதி காலை, துவங்கியது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். அன்று இரவு யாளி வாகனத்தில் வீதி உலா வந்தார். ஆறாம் நாள் நிகழ்ச்சியாக, 13ம் தேதி காலை, 6:30 மணிக்கு சூர்ணாபிஷேகம் முடிந்த பின்னர், காலை, 7:00 மணிக்கு வெள்ளி சப்பரத்திலும், இரவு, யானை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளினார்.ஜன 15 8ம் நாள் நிகழ்ச்சியாக, மதியம், 2:30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில், உற்சவர் வீதி உலா வந்தார். ஜன 16 காலை, 6:00 மணிக்கு ஆள்மேல் பல்லக்கில் உற்சவர் பவனி வந்தார். காலை, 10:30 மணிக்கு சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஜடாரியுடன் எவ்வுள் கிடந்தானுக்கு (சின்ன பெருமாள்) தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி உற்சவரை வழிபட்டனர். 10ம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (17ம் தேதி), இரவு 8:00 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வலம் வருகிறார். இரவு, 10:30 மணிக்கு கொடி இறக்கத்துடன் பிரம் மோற்சவ விழா நிறைவடைகிறது.