பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
திருத்தணி : சிவன் கோவில்களில் நடந்த மலைச்சுற்று விழாவில், கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் அமைந்து உள்ளது சிவசக்தி சித்தேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று, மலைச்சுற்று விழா வெகு விமர்ச்சையாக நடத்தப்படுகிறது. அதேபோல், ஜன 16 மலைச்சுற்று விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, மூலவர் ஈஸ்வரனுக்கு காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 2:00 மணி வரை கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை கோஷ்டியினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். விழாவில், 5,000 பக்தர்கள் வந்திருந்து, மாலை, 7:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர். இதேபோல், அதன் அருகே உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். பொதட்டூர்பேட்டை ஆறுமுக மலையில், மலைச்சுற்று திருவிழா நடந்தது. விழாவை ஓட்டி காலை, 11:00 மணிக்கு மலையடி வாரத்தில் உள்ள அமிர்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர், சித்தி வினாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோருக்கு, சிறப்பு திருமஞ்சன வழிப்பாடு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பூப்பல்லாக்கில் இறைவன் பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை கரகாட்டத்துடன் உற்சவர் சிவன் பார்வதி, வினாயகர், முருகர் வள்ளி, தெய்வானை திருவீதியுலா நடந்தது. இதேபோல், கரீம்பேடு ஞானபிரசன்னா அம்பிகை உடனுறை ஸ்ரீ நாததேஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவர் புறப்பட்டு ஆந்திர மாநிலம் நகரி மலைச் சுற்று மண்டபத்திற்கு வந்து, நாகலாபுரம், நாராயணவனம், புத்தூர், நகரி ஆகிய பகுதிகளில் வந்த உற்சவர்களுடன் சந்திப்பு நடந்தது. பின்னர் இரவு, ஊர்வலத்துடன் கோவிலுக்கு திரும்பியது. அத்திமாஞ்சேரி பேட்டை கிராமம் அருகே நெற்குன்றம் மலையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலைச் சுற்று விழாவிற்கு சென்றனர்.