பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 01:04
திருப்புத்தூர்; தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் குளத்தில் இன்று காலை அஸ்திரத்தேவர், அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் தீர்த்தவாரிக்காக சிவனின் பிரதிநிதியாக அஸ்திரத் தேவரும், விநாயகரின் பிரதிநிதியாக அங்குசத்தேவரும் கோயில் திருக்குளம் தெற்கு படித்துறையில் எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் திருக்குளத்தில் காலை 10:30 மணிக்கு சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் , அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக ராசிக்கட்டத்தின் கீழ் பராபவ ஆண்டிற்கான புதிய பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெறும். தொடர்ந்து சுவாமி உள்பிரகாரம் புறப்பாடு நடைபெறும். ஏற்பாட்டினை நடப்பு காரியக்காரர்கள் கோனாபட்டு ஏ.ஆர்.ராமசாமி செட்டியார், அரிமளம் என்.கண்ணன் செட்டியார் செய்கின்றனர்.