பல்லடம்,: ஒருவர் சொன்னால் மந்திரம்; பலர் சொன்னால் அது மகா மந்திரம் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டில் காமாட்சிபுரம் ஆதினம் அருளாசி வழங்கினார்.
பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் இன்று நடந்தன. சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: விதியை மாற்றும் வல்லமை கொண்டவர் முருகப்பெருமான். ஆறுமுகனை அழைத்தால் வேலும், மயிலும் துணைக்கு வரும். தலையெழுத்தை மாற்றுவது முருகப்பெருமான் மந்திரம். நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, தாய், தந்தை மற்றும் குடும்பம் அமைகின்றது. மனிதனின் மனம் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. இந்த ஆண்டு சூரியனின் கதிர்வீச்சு மிக அதிகமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க மனமிறங்கி வருமாறு வருன பகவானை வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒருவர் சொன்னால் மந்திரம்; பலர் சொன்னால் அது மகா மந்திரம். பலர் சொல்லும் மகாமந்திரத்துக்கு அதிக பலன் உண்டு. மின்சாரத்தை தொட்டால் நம் மீதும் பாய்வது போல் தான் மந்திரங்களின் சக்தியும் பரவும். இறைவன் மீதான பக்தி காரணமாக, எத்தனையோ எண்ணிலடங்கா சாதனை புரிந்தவர்கள் நமது நாயன்மார்கள். புறத்தில் இருப்பது கண்ணுக்கும்; அகத்தில் இருப்பது இறைவனுக்கும் தெரியும். நேரம் காலம் வாங்க முடியாதது. அதுபோல, பொருட்கள் போனால் வரும்; ஆனால், அருள் மீண்டும் வராது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு நடந்த மகா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் பக்தர்கள் நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.