காஞ்சிபுரம்: சித்திரை மாத கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சித்திரை மாத கிருத்திகையையொட்டி, நேற்று மூலவருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. கந்தபுராணம் அரங்கேற்றம் நடந்த மண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முத்துகுமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருக்குமரகோட்ட திருக்கோவில் வழிபாட்டு குழு சார்பில், 367வது மாத கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வடமாவந்தல் ஏ.என்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பேராசிரியர் ராமு, ‘அரியதும், பெரியதும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். கச்சபேஸ்வரர் கோவில் ஒதுவார் தமிழ் செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.