பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
பழநி: பழநி அருகே காவலப்பட்டியில் காளைமாடுகளுக்கான பொங்கல் விழாவில், சலங்கை மாடு ஆட்டம் நடந்தது. நெய்க்காரப்பட்டி அருகே காவலப்பட்டியில் ராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊர் பொது மைதானத்தில் சலங்கை மாடு ஆட்டம் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மாட்டுப் பொங்கல் அன்று பசு ஈணும் காளை மாடுகளை, சுவாமிக்கு நேர்த்திகடனாக நேர்ந்துவிடுவது பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. இவைகள் காடு, வயல்வெளிகளில் திரிகின்றன. இவ்வாறு நேர்த்திகடனாக விடப்பட்ட காளை மாடுகளுக்கு அடையாளமாக காதில் சிறிய கீறல் இடப்படும். அவற்றை பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக பிடித்து வந்து, காளைமாடுகளை சிறப்பிக்கும் விதமாக, அவற்றிற்கு பச்சரிசி பொங்கல் கரும்பு படையல் வழிபாடு செய்து, சலங்கை மாட்டு பொங்கல் விழா நடத்துகின்றனர். இவ்வாண்டு காவலபட்டியில் நடந்த விழாவில் பெரியவர்கள், இளைஞர்கள் காலில் சலங்கை அணிந்து, தேவராட்டம், சலங்கை மாடு ஆட்டமாடுகின்றனர். காளைமாடுகளுக்கு பயிற்சியளிக்கும் விதமாக அவைகள் முன், சலங்கை கட்டி ஜல்..ஜல்.. ஓசையுடன், கம்பை வைத்து ஆட்டம் காண்பிக்கின்றனர். அப்போது காளைமாடுகளும் சீறிபாய்ந்தது. பின்னர் காளைமாடுகளுக்கு பச்சரிசி பொங்கல்,வாழைப்பழம் படையல் படைத்து காலில் விழுந்து பொதுமக்கள் ஆசிபெற்றனர்.