பதிவு செய்த நாள்
26
ஏப்
2026
12:04
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் 10 நாள் சித்திரை திருவிழா நாளை(ஏப்.,27) துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பிரவீன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்ட எஸ்.பி., அரவிந்த், கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் ஆகியோருடனும், பக்தர்கள் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஆர்.டி.ஓ., அன்பழகன் உள்ளிட்டோரிடமும் ஆலோசனை செய்தார்.
அவர் கூறியதாவது: ஏப்.,26(இன்று) மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.28 திருக்கல்யாணம், ஏப்.29 தேரோட்டம் நடக்கிறது. ஏப்.30ல் கள்ளழகர் எதிர்சேவை, மே 1ல் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தாண்டு 125 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 6 நடமாடும் கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி, 2000க்கும் அதிகமான இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு பாதுகாப்பு பணியில் 15க்கும் மேற்பட்ட எஸ்.பி.,கள், 50க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.,க்கள் என 2500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர். போதுமான அளவு மருத்துவ முகாம்களோடு, 10 ஆம்புலன்சுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் செல்வதற்கு 512 மண்டகப்படிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மண்டகப்படிதாரர்கள் பொதுப்பணித்துறை, மின்துறையிடமிருந்து கட்டமைப்பு நிலைத்தன்மை சான்றிதழ் பெற வேண்டும். தனி நபர்கள் அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவை 8 லட்சம் பக்தர்கள் கண்டு களித்தனர் என்றார்.
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீ க் ஷித் பங்கேற்றார். கலெக்டர் கூறியதாவது: வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆற்றை கடக்கவோ, இறங்கவோ வேண்டாம். நீரில் சிக்கும் பக்தர்களை மீட்க 50க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரில் 5000க்கும் மேற்பட்ட போலீசார், 600க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.குறிப்பாக வைகை வடகரை, தென்கரைகளில் மொத்தம் 5 தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்படவுள்ளன. கள்ளழகர் வரும் வழிகளில் மரக்கிளைகள் அகற்றப்படும். கோரிப்பாளையத்தில் அதிகளவில் தெருவிளக்கு அமைக்கப்படவுள்ளது என்றார். கள்ளழகர் கோயில் இணைகமிஷனர் ஹரிஹரன், மீனாட்சி கோயில் இணைகமிஷனர் சுரேஷ் உடனிருந்தனர்.
பரமக்குடி சித்திரை திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி வீதி உலா
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழாவில் ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர். கோயிலில் தினமும் பல்வேறு வாகனங்களில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி வீதி உலா வருகின்றனர். நேற்று ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய நிலையில், இன்று காலை நடராஜர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து இரவு குதிை வாகனத்தில் திக்விஜயம் நடக்கிறது. நாளை விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.