அவிநாசியில் தேரோட்டம்; கொளுத்தும் வெயிலிலும் திரண்ட பக்தர்கள்
பதிவு செய்த நாள்
29
ஏப் 2026 10:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்றதும், தமிழகத்திலேயே உயரமான மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சோமாஸ்கந்தர் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் நேற்று நடந்தது. கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது. நேற்று காலை, 10:31 மணிக்கு பெரிய தேரோட்டம் துவங்கியது. மதியம் 1:05 மணியளவில் தேர் மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வருகிறது. வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலை நிறுத்தப்படும். ரத வீதிகளில்,தேர் ஆடி அசைந்து வருவதைக் கண்ட பக்தர்கள், ‘ஓம் நம்சிவாயா, தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என கோஷம் எழுப்பினர். நேற்று காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்தபோதும், மூன்று மணி நேரம் பக்தர்கள் தேர் இழுத்தனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதினம் குமரகுருபர சுவாமி, கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமி, திருப்பூர் எஸ்.பி. கிரீஷ் அசோக் யாதவ், அறநிலையத்துறை இணை ஆணையர் ஹர்ஷினி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
|