தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம் குலசேகரன்பட்டினம். முத்துக்களை ஆற்றி குணப்படுத்துவதால் இங்குள்ள அம்மன் முத்து + ஆற்று + அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் சுவாமியும் அம்மனும் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு (புரட்டாசி மாதம்) கொண்டாடப்படும் தசரா விழா புகழ் பெற்றது. பொதுவாக அம்மை நோயை முத்துப் போட்டதாக கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதன்படி முத்துக் கண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அம்மை நோய் குணமாவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சோழபுரம் என்னும் இடத்தில் உள்ளது வெட்காளியம்மன் கோயில். இங்கே அம்மன் 10 கரங்களுடன் அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனை தரிசிக்க 18 படிகளை கடந்து செல்ல வேண்டும். ஐயப்பன் கோயிலைப் போன்று அமைக்கப்பட்டுள்ள கம்புப் பயறு ஆகியவற்றை முளைக்க வைத்து வழிபாடு செய்கிறார்கள். அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக தரப்படுவது கூடுதல் சிறப்பு.