வைணவ மரபில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிக்கும். அதுபோல திருமாலின் ஆயுதங்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சங்கும் சக்கரமும்தான்! பல திவ்விய தேசங்களில் சக்கரத்தாழ்வார் காட்சியளிக்கின்ற போதிலும், புராதனமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம், குடந்தை சக்கரபாணி ஆலயம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திருக்கோயில்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒருமுறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்சன சதகத்தை இயற்றி சுதர்சனரை வேண்ட.... காவிரி வெள்ளம் குறைந்து அரங்கன் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்!
கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக்கோயில் அமைந்துள்ளது. வேறெங்கும் காணமுடியாத அமைப்பு அது. மேலும் இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உற்சவரும்) சுதர்சன வல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, விஜயவல்லித் தாயாரும் பிரகாரத்தில் தனிக் கோயில் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு அதனால், இத்தலத்தை பாஸ்கர சேத்திரம் என்றும் போற்றுவர்.